திங்கள், 4 மே, 2020

மணிமேகலை காப்பியத்தில் அறங்கள்


மணிமேகலை காப்பியத்தில் அறங்கள்

              தமிழ் இலக்கியங்களில் அறம் கூறும் முறைமை பண்டைய காலந்தொட்டு நவீனக்காலம் வரை இடம் பெறுகின்றன.அகம் புறம் எனப் பகுக்கப்பட்ட இலக்கிய நிலையிலிருந்து ஆய்வுக் கோட்பாட்டு  நிலை வரையிலும் அறமும் அறம் சார்ந்த கூறுகளும் விழுமியங்களும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. அறத்தின் மாட்சினையும் அறம் செய்வதின் பயனையும் அறநெறி வழியாக நடப்பதின் பலனையும் இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன. இவ்வகையில் அறத்தினை, கோட்பாட்டு நிலையில் எடுத்துரைக்கும்  இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் இடம் பெறும் அறங்களை அடையாளப் படுத்தலை மையாகக் கொண்டு இக்கட்டுரை கட்டமைக்கப்படுகிறது.

அறம் பற்றிய சிந்தனைகள்

                  அறத்தான் வருவதே இன்பம்என வள்ளுவர் பெருந்தகை குறிப்பிடுகிறார். அறம் என்பதற்குகையறம், தருமம், நீர்மை, நூற்பயன் நான்கினொன்று, பெரியோரியல்பினொன்று”1என அகராதி பொருள் தருகிறது. தருமம், தீப்பயனுண்டாக்கும் சொல், இயமன்,நீதி’2-எனச் செந்தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. அறம் இன்பத்தைத் தந்து இன்னல்களை வெல்லும்  ஆற்றலைத் தருகிறது; காலம் தாழ்த்தாது செய்கின்ற பொழுது, உயரியக் குறிக்கோள்களை உருவாக்கும் ஆயுதமாகவும் விளங்குகிறது". அறம் செய விரும்புஎன ஒளவைப்பாட்டி சொல்லிய கருத்துக்கேற்ற போல் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் எல்லையில்லாமல், தனக்கு இயலும் அளவிற்கு அறம் செய்ய வேண்டும். பிறக்குத் தீங்கு நினையாத மாசற்ற மனத்தால் பொருள் செய்தொழுகும் முறை அறமாகும்”.3 அறத்தின் வழி நடப்பவர்;க்கு  ஒரு தீங்கும் வராது.நஞ்சினை உண்டாலும் அழுதமாக மாறி விடும். மாறாக அறநெறி பிறழ்ந்து வாழ்வார்க்கு அமுதமும் நஞ்சாய் மாறி உயிரைப் பறிக்கும் எனத் தேம்பாவணி குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல

          பொய் மறந்து இன்னா தெல்லாம் போக்கி நல்லறமே பூண்டு
           மைமறம் தவிர்ந்தீராகில் வானின் மேற்குலமாய் வாழ்வீர்” 4
  என அறத்தின் மாண்பினைத் குறித்துரைக்கிறது.

இளங்கோவின் அறம்


               இளங்கோவின் பெருமையைப் பேசும்  சித்திரச் சிலப்பதிகாரம் தமிழ் வாழும் காலமெல்லாம் வாழும் தகுதியைப் பெற்றுள்ளது; சங்க இலக்கியத்தின் பிழிவாகக் கருதப்படுகிறது. அற இலக்கியங்களின் கருத்துக்கள் பொதிந்த பொக்கிசமாகப் போற்றப்படுகிறது.சிலப்பதிகாரம் அறம் கூறும் முறைமையில்,

                                 முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
                                  பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண்” 5
எனத் திருக்குறளின் கருத்தோடு  சிலம்பு ஒத்து இலங்குகிறது.
மேலும்
                அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்
                 உரைசால் பத்;தினிக்கு உயந்தோர் ஏத்தலும்
                 ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்” 6

இளங்கோவின் அறங்களாகும். இளங்கோவின் அறங்கள் யாவும் சமயக்கருத்துகளின் மேல் ஏற்றிக் கூறப்பட்டதாக அமைகின்றது.அவற்றுள் தெய்வம் தெளிமின், தவநெறி மேற்கொள்ளுங்கள் ஆகிய இரண்டு அறங்களைக் காப்பியத்தின் இறுதியில் எடுத்துரைக்கிறார். சிலப்பதிகாரம் சைவ, வைணவம்,சமணம் ஆகிய சமயங்கனைப் பற்றி பேசுகிறது.சிலம்;பில் இடம் பெறும் கவுந்தியடிகள்,மாங்காட்டு மறையோன் ,இடைக்குலப் பெண்கள்,மாடலன் மறையோன் போன்ற கதைமாந்தர்கள் சமயப் பரப்புரையாளராகத் திகழ்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் சிலம்பில் காணப்படும் அனைத்தும் பாத்திரங்களும் தவப்பெரியோர்களால் தான் வழி நடத்திச் செல்லப்படுகின்றன. இளங்கோவடிகள் எந்தச் சமயத்தையும் சார்ந்து நிற்கவில்லை. இருப்பினும் அனைத்து அறக்கருத்தக்களையும் சமயத்தின் பின்புலத்தில், மக்களை நெறிப்படுத்துகிறார் என்பது மெய்மையான சிந்தனையாகும். சிலம்பில், மக்களை நல்வழிப்படுத்த துன்பங்களை நீக்க, தீய ஒழுக்கம் உடையவரைத் தண்டிக்க,அரசநீதி தவறும்போது மக்களை விழிப்படையச் செய்ய வெள்ளிடை, இலஞ்சி, நெடுங்கல்,பூதசதுக்கம்,பாவைமன்றம் ஆகிய ஐவகை மன்றங்கள் இருந்தாகச் செய்திகள்இடம்பெறுகின்றது.

மணிமேகலையில் அறம்

           மணிமேகலை அறவியின் அற்புதத்தை அறிவித்துக் கொண்டிருக்கும் அறக்காப்பியமாகும். கற்றார்;க்குக் களிப்பளிக்கும் சிந்தனைக்கு இனிய சமுதாயச் சீர்திருத்தக் காப்பியமாகும். சாதி, மது, சிறை,பரத்தமை ,கொலை, களவு போன்ற தீயொழுக்க நெறிகளுக்கு எதிராக தோற்றம் பெற்ற இலக்கியமாகும். இக்காப்பியம் அனைத்து தீமைகளுக்கும் அடிப்படை காரணமாக அமைவது பசிஎன்னும் கொடுமை தான் என வலியுத்துகிறது. ஆகையினால் தான் பசியைப் பிணியாகவும் பாவியாகவும் பாவிக்கிறது.
 குடிப்பிறப்பு அழிக்கும் ,விழுப்பம் கொல்லும்

              பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
            நாணனிகளையும்  மாணெழில் சிதைக்கும்
            பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
            பசிப்பிணி என்னும் பாவி” (மணி: 11.76-80)

எனப் பசிப்பிணியின் கொடூர நிலையை மணிமேகலை எடுத்துரைக்கிறது. பசிப்பிணியை ஒழிப்பதுதான் அறங்களுக்கெல்லாம் பேரறம் ஆகும் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.இம்மையும் மறுமையும் பேசும் மணிமேகலை அறம் பற்றி விளக்கும் போது,
               அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
                மறவாது இதுகேள் , மன்னுயிர்க்கு எல்லாம்
              உண்டியும் உடையும்; உறையுளும் அல்லது
                கண்டது இல்” (மணி: 25.227-231)

என மணியான தொடரைக் குறிப்பிடுகிறது.மணிமேகலை வலியுறுத்திக் கூறும் தலைமையான அறமானது,

                  மண்டிணி ஞாலத்து வாழ்வோர்கெல்லாம்
                 உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தவர்” (மணி: 11.95-97)

ஆவாரென  இப்பாடலடிகள் உணர்த்துகின்றன. மனிதர் உடம்பை இழிவானது, பிணிகூடுவது,குற்றம் புரிவது, கவலையின் கொள்கலமாக இருப்பதை,

புனைவன நீங்கிற் புலால்புறந் திடுவது
மூப்புவிளி வுடையது தீப்பிணி இருக்கை
 பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்” (மணி: 4.115-116)

என மணிமேகலை குறிப்பிடுகிறது.

நிலையாமை அறம்

      மணிமேகலையை உதயகுமாரனின் இறப்புக்குப் பின் இராசமாதேவி பழிவாங்கி சிறையில் அடைத்தாள். மணிமேகலை சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றினாள். அதோடுமட்டுமல்லாமல், ‘எல்லா உயிர்களிடத்தும் நீ இரக்கம் கொண்டுஅன்பறத்தைக் கடைபிடிக்க வேண்டுமெனஇராசமாதேவிக்கு  அறிவுரை கூறினாள் மணிமேகலை. பளிக்கறை புக்க காதையில் உதயகுமாரனிடம் சுதமதி இளமை,யாக்கையின் நிலையாமை தன்மையினை அறிவுறுத்திய , போது பாம்பு அடங்கும் புற்றைப்போல உடம்பு என அறம் போதிக்கிறாள்.சுடலை காட்டும் அறநெறியாக- தவநெறியில் செல்லும் துறவிகள்,பெருஞ்செல்வர், அண்மையில் மகவுபெற்ற இளமகளிர், அறம்அறியா இளம்சிறுவர்,முதியோர், இளையோர்ஆகியோரை வேறுபாடின்றிப் கொன்று குவிக்கும் கொடுந்தொழிலைச் செய்யும் எமனின் செயலைக் கண்டு மக்கள் அறியாமையில் இருக்கின்ற  உண்மையினை.

அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
 கழிபெருஞ்செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
 மிக்க நல்லறம் விரும்பாது, வாழும்
   மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ” (மணி: 6.101-104)

எனச் சக்கரவாளக் கோட்டம் காதை உரைக்கிறது.மணிமேகலை நரைமிக்க ஒரு மூதாட்டியைக் காண்பித்து உதயகுமாரனுக்கு இளமை, யாக்கை பற்றிய அறத்தினைப் போதிக்கின்றாள்.

இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது
 வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லாது
 புத்தேன் உலகம் புதல்வரும் தாரார்
   மிக்க அறமே வித்துணையாவது” (மணி: 22.135-138)
என நிலையாமை  அறத்தை உதயகுமாரனுக்குப் போதிக்கின்றாள்.

தவப்பெரு நல்லறம்

        பௌத்தச் சமயத்துறவியான் அறவணஅடிகள் மாதவிக்கு அறநெறி உரைக்கும் ஐந்து சீலக் கொள்கைகளைத் தெளிவித்து கூறும் காட்சிகளை மணிமேகலையில்

பிறந்தோர் உறுவர் பெருகிய துன்பம்
 பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்
 பற்றின் வருவது முன்னது; பின்னது
 அற்றோர் உறுவது அறிக என்றருளி
 ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
 உய்வகை இவை கொள்” (மணி: 2.64-68)

 என  விளக்குகிறார் சீத்தலை சாத்தனார். அதாவது ஐவகைச் சீலத்து அமைதியாவது, கொலை,களவு,கள்,காமம், பொய் என்பவற்றிலே மனத்தைச் செல்ல விடாது கட்டுப்படுத்திக் கொள்ளும் ஒழுக்கத்தின் நிலையை இலக்கிய பாத்திரங்கள் வழியாக அறிவுறுத்துகின்றார் சாத்தனார். உயிர்கள் அனைத்திடமும் கருணை காட்ட வேண்டுமென்று அறவுரை கூறியதோடு அதன் படி வாழ்ந்து காட்டிய புத்தரின் கோட்பாட்டினை, ஆபுத்திரன் பாத்திரத்தின் வாயிலாக காட்சிப் படுத்துகிறார் சீத்தலை சாத்தனார். வீட்டில் வேள்விக்காகப் பலிகொடுக்க, கட்டிருந்த பசுவை விடுவித்து அறிவுரை கூறி உயிர்ப்பலி கொலையைத் தடுத்து நிறுத்துகிறான் ஆபுத்திரன்.

           பிறந்த நாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்
          அறந்தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
           தனோடு வந்த செற்றம் என்னை” (மணி: 13.53-55)

என்னும்  பாடலடிகள் வழியாக உயிர்க்கொல்லாமை கருத்தினை உறுதிப்படுத்துகிறார் சாத்;தனார். கள் உண்ணாமை பற்றி, சாதுவன் நாகர் தலைவனிடம்

மயக்கும்கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்லறம் செய்வோர் நல்லுக கடைதலும்
அல்லறம் செய்வோர் அருநர கடைதலும்
ண்டென உணர்தலின்………” (மணி: 16.84-90)

என அறிவுரை கூறி நாகர் இன மக்களைத் திருத்தினான்.மணிமேகலை எத்தனையோ அறங்களைச் சொன்னாலும் பசிப்பிணி தீர்ப்பதே தலைசிறந்த அறமாக எடுத்துரைக்கின்றது.ஆகையினால் தான் எல்லா சமயங்களும் அன்னதானத்தைப் பெரிதும் போற்றுகின்றன. ஏனெனில் மக்களின் பசியைப் போக்கவில்லையென்றால் மக்களது வாழ்வியல் அர்த்தமற்றதாகப் போய்விடும்.

மானம் கல்வி குலம் வண்மை அறிவுடைமை
 தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை- தேனின்
 கசிவந்த சொல்;லியர்மேல் காமுறுதல் பத்தும்
            பசிவந்திட பறந்து போகும்” 7

எனப் பத்து குணங்களைக் சுட்டிக்காட்டி இவை அனைத்தும் பசிப்பிணியின் காரணமாக இல்லாமல் போய்விடும் என்கிறார் ஒளவையார்.
ஆகவே தான் மணிமேகலை

            ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
          மேற்றே உலகின் மெய்நிலை வாழ்க்கை” (மணி: 11.93-94)

என விளக்கியுரைக்கிறது.பசி ஒருவனுடைய நல்ல குணங்களை இழக்கச் செய்து விடும். பசியை நீக்கும் உணவாகிய மருந்தைத் தருபவன் பசிப்பிணி மருத்துவன் ஆவான்.சங்க காலத்தில் பசிப்பிணி மருத்துவர்களாக வள்ளல்களும் மன்னர்களும் திகழ்ந்தனர்.சங்க காலத்தில் மன்னர்களும் வள்ளல்களும் பசிஎன்னும் தீயை தணிக்கும் நீராக இருந்தனர்.வறுமையும் புலமையும் சேர்ந்தே இருந்தால் பசியோடு வாழ்வு நடத்திக் கொண்டிருந்த இரவலர்க்கு உண்டி கொடுத்த உயிர்க்கொடுத்தவர்களாகத் திகழ்ந்தனர். இரவலர்க்கு, மன்னர்கள் உணவு கொடுத்து  பசி போக்கியதை ஆற்றுப்படை இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. இதன்  அடிப்படையில், இரவலர்களின் பசியை மன்னர்களும் வள்ளல்களும் போக்கியதால் பசிப்பிணி மருத்துவர்களாகக் கருதப்பட்டனர்.இதனை பாணனின் கூற்றாக,

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்கஇவன் கடும்பினது இடும்பை
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே”8

எனச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், சிறுகுடிகிழான் பண்ணனைப்  பாடினார்தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்று முழங்கிய பாரதி,

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
 இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்”9

எனப் பசியைப் போக்குவதற்கு முரசு அறைகிறான்.பசித்தவனுக்குக் கடவுள் உணவுமட்டுமேயாகும். உயிர்களுக்கு உணவே முதல்; தேவையாகிறது. உறுபசி இல்லாத நாடே நல்லநாடுஎன வள்ளுவர் குறிப்பிடுகிறார்.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் இராமலிங்க அடிகளார், தருமச்சாலை நிறுவி பசிப்பிணியைப் போக்கினார்.இதனை தான் மணிமேகலை தவப்பெரு நல்லறமாகக் கொண்டு  பசிப்பிணிப் போக்கியதை,

மக்கள் தேவர் எனவிரு சார்க்கும்
 ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன்
 பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
 தவப்பெரும் நல்லறம் சாற்றினார்” (மணி: 12.116-118)

என்னும் அடிகள் மூலமாக அறியமுடிகிறது. பசிப்பிணியைப் போக்குவதற்கு அன்னமிடுதல் சிறந்த அறச்செயலாகக் கருதப்படுகின்றது.

 தொகுப்புரை

                       மணிமேகலை காப்பியத்தின் நோக்கம் அறத்தை வலியுறுத்துவதாகும்.அதனால் அறத்தின் மாண்புகள் காப்பியத்தின் முழுவதும் பல்வேறு கதைமாந்தர்களின் வழியாகப் புலப்படுத்தப் படுகின்றன.ஆதிரை,நல்ல அறங்களைச்செய்தல் ஆபுத்திரன் கொல்லாமை அறத்தை வலியுறுத்தல், சாதுவன் கள்ளுண்ணாமை , புலால் உண்ணாமையை அறிவுறுத்தல், மணிமேகலை இராசமாதேவிக்கு நல்லறங்களைப் போதித்தல், பஞ்ச சீலக்கொள்கையைக் குறிப்பிடுதல், மணிமேகலை அமுதசுரபி பெற்று பசிப்பிணி போக்கியது,உயிர்களிடத்து அன்பு செலுத்தியது, அறவண அடிகள் அரசிக்கு அறிவுறுத்திய அறிவுறுத்திய அறங்கள், மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் உரைத்தல், இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, ஆகியவற்றை அறங்களாக மணிமேகலை சுட்டிக்காட்டுகிறது. மணிமேகலை  அறத்தின் பயனாக அமுதசுரபி   கிடைத்தாகக் குறிப்பிடுகிறாள். அதோடு சிறைக்கோட்டத்தை அறகோட்டமாக மாற்றினாள் ;நல்லவன அறிதலே அறிவு;அறிவு அறிந்து செயல்படுதலே அறம் என்பதின் அடிப்படையில் அறமும் அறிவும் ஒன்றிணைந்த காப்பியமாக மணிமேகலை காப்பியம் திகழ்கிறது. பசியால் வாடும் மக்களுக்கு உதவி செய்து, நல்லறத்தை மேற்கொள்ளும் கடமை மனிதர் அனைவருக்கும் பொதுவானவையாகும்.ஆகவே தான் அறம் செய்வதின் இன்றியமையாமையை தமிழ்க்காப்பியங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு மணிமேகலை காப்பியம் விதிவிலக்கல்ல என்பது மெய்மையாகும்.

அடிக்குறிப்புகள்

1.       நா.கதிரைவேற்பிள்ளை தமிழ்மொழி அகராதி,சாரதா பதிப்பகம் சென்னை 2003,பக்.154.
2.      டாக்டர்..சுப்புரெட்டியார் . தமிழ் இலக்கியங்களில் அறம்,நீதி,முறைமை, தேன்மழை                 வெளியீடு,1988,சென்னைபக்- 7.
4.       வீரமாமுனிவர், தேம்பாவணி , மீட்சிப்படலம் -137
5.       சிலப்பதிகாரம் ,வஞ்சினமாலை ,அடிகள் 3-4.
6.       சிலப்பதிகாரம் ,பதிகம் -அடிகள் 55-57.
7.       ஒளவையார் ,நல்வழி, 26 ஆவது பாடல்
8.       புறநானூறு 173 ஆம் பாடல்
9.       பாரதியார் கவிதைகள் ,முரசு. 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக